Tuesday, April 21, 2009

சாரல் மழை

வீட்டிற்கு வெளியில் வந்தபோது லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது.

தூறல்கள் என் உச்சந் தலையில்,
மணிக்கட்டில்,
தோளில் என தீண்டியபோது, சிலிர்த்தேன்!

முகத்தை அண்ணாந்து சற்றே கண்களை சுருக்கினேன்,
மெல்ல சாரல் என் முகத்தில் பூத் தூவலாகத் தெளித்தது,
முகத்திலும் அந்தத் தூறல்களை வாங்கிக் கொண்டேன்..

சிறிது நேரத்தில் தூறல்கள் வலுத்த போது, மனது குதூகலித்தது!

இரண்டு கைகளையும் விரித்து, பம்பரம் போல் இந்த மழையில் சுழன்று சுழன்று கட்டுப்பாடு இல்லாமல் ஆட வேண்டும் என்று ஆசை வந்தது்!

ஆசையை நிறைவேற்ற நினைக்கையில், சிறிது தயக்கம் எட்டி பார்த்தது,
தெருவில் போகிறவர்கள் என்னை பைத்தியம் என எண்ணக்கூடுமோ?
மனதில் தோன்றும் சிறு சிறு ஆசைகளை எல்லாம் செய்ய கூட சுற்றம், சமுதாயம் என்று எத்தனை யோசிக்க வேண்டியிருக்கிறது:-(

யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை,
இந்த நிமிடம்
என்னை நனைக்கும் இந்த மழை எனக்கு பிடித்திருக்கிறது,
அனுபவிக்க போகிறேன் என்று மனது துள்ளலுடன் குதிக்க, அதே விநாடி...

"எழுந்திரி எழுந்திரி,மணி ஏழாச்சு, இன்னும் என்ன தூக்கம்" அம்மாவின் குரல்,

அட ச்சே! எல்லாம் கனவா:-(

-------------- *--------------

மழையில்
குடை விரித்தால்
உடல் தப்பிக்கும்
ஆனால்
சாரல் நனைக்கும்
மனது வரை...

மழை பெய்தால்,அவசர அவசரமாய் குடையைப் பிரிக்கிறவங்களையும், ஒதுங்க இடம் தேடி ஓடுறவங்களையும் பார்த்தா , எனக்கு சிரிப்பு தான் வரும், உங்களுக்கு?????

Tuesday, April 14, 2009

முதல் பதிவு.

வணக்கம்,

வெகு காலமாக தமிழ் வலைதளங்களை படித்ததின் பாதிப்பில் இன்று நானும் தமிழ் வலைதளம் துவங்கியுள்ளேன்.

என் எழுத்தில், கருத்தில்.....
பிழைகள் இருந்தால்
சுட்டிக் காட்டுங்கள்!
பிடித்திருந்தால்
தட்டிக் கொடுங்கள்!!

நான் எழுதுகையில்
உருவத்தையும்
நீங்கள் வாசிக்கையில்
உயிரையும்
பெறுகின்றன, என் எழுத்துக்கள்!!!